டெல்லியில் குடியரசு தின விழா பேரணியின் போது தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது. இதில் உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
1950-ம் ஆண்டு முதல் இந்தியா தன்னாட்சி கொண்ட குடியரசு தேசமாக திகழ்கிறது. ஆனால் 1955-ல் இருந்துதான் குடியரசு தின அணிவகுப்புகள் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம்.
நடப்பு ஆண்டில் எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி பங்கேற்றார். அடுத்த மாதம் நடைபெறும் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார்.
இந்நிலையில் குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை டெல்லியில் சில நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி கர்தவ்யா பாதையில் இன்று கடும் குளிரிலும் வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதனிடையே 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா பேரணியில் தமிழ்நாடு அரசு சார்பில் இடம்பெறும் அலங்கார ஊர்தியில், உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
உத்திரமேரூர் குடவோலை முறை கல்வெட்டு என்பது உத்திரமேரூர் கிராமம் வைகுந்தப் பெருமாள் கோவிலில், முதலாம் பராந்தக சோழனின் (கி.பி. 907–955) 12 ஆம் ஆட்சி ஆண்டிலும் (கி.பி 917), 14 ஆம் ஆட்சி ஆண்டிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைக் குறிக்கும்.
உத்திரமேரூரின் மையப்பகுதியில் தமிழர் கலைப்பாணியில் அமைந்துள்ள வைகுந்தப் பெருமாள் கோவில், பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனால் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.இங்குள்ள கல்வெட்டுக்களில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் பெயரே முதன்முதலில் இடம்பெற்றுள்ளது.