இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13-வது அரசியலமைப்பு திருத்தத் தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கோரி, விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட காலமாகப் போராடி வந்தது. இது தொடர்பாக, இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வந்தது.
இப்போரில், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதோடு, அந்த இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடு முற்றிலுமாக முடங்கிப் போய் விட்டது.
இது ஒருபுறம் இருக்க, இலங்கையில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண, மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி, முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆகியோர் இணைந்து, 1987-ம் ஆண்டு அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் 13-வது திருத்தம் செய்வதற்கான உடன்பாட்டை உருவாக்கினர்.
அதாவது, அரசியலமைப்புச் சட்டம் 13ஏ தமிழ்ச் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்குகிறது. இந்தத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம், இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களிடத்திலும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.
ஆகவே, இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதில், இந்தியாவும் தமிழர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில்தான், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து, தமிழர்கள் பெரும்பான்மை வகிக்கும் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, “இந்த 13-வது திருத்தத்தின் விதிகளை நாம் ஆராய்ந்தால், வலுவான உள்ளூர் பொருளாதாரத்தை நிறுவுவதற்கு போதுமான அதிகாரம் உள்ளது. அந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்.
மேலும், இதற்கான முன்முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன். தற்போது, மேற்கு மாகாணம் சுதந்திரமான செலவினங்களைச் செய்யக்கூடிய ஒரே பிராந்தியமாக உள்ளது. மற்றவை நிதி ரீதியாக அதைச் சார்ந்திருக்கின்றன.
இதனால், இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை அவசியமாகிறது. 13-வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாகாணமும் வளர்ச்சிக்கான பாதையை பட்டியலிட முடியும். இந்த அதிகாரங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது” என்று கூறியிருக்கிறார்.