7வது ‘பரிக்ஷா பே சார்ச்சா’ நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 1 கோடிக்கும் அதிகமான போட்டியாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டில் இருந்து ‘பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 7வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். அதேபோல ஆசிரியர்கள், பெற்றோர்களும் இதில் கலந்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் தனியாக இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இதில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல், மாணவர்கள் தங்களின் கேள்விகளைப் பிரதமர் மோடிக்கு அனுப்பலாம். டிசம்பர் 11 தேதி தொடங்கிய விண்ணப்பிக்கும் தேதி ஜனவரி 12ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த தனித்துவமான நிகழ்ச்சியில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளதாகவும் கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியானது, வருகின்ற ஜனவரி 29 ஆம் தேதி, காலை 11 மணிக்கு டெல்லியில், பிரகதி மைதான பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பிரதமருடனான இந்த உரையாடலில் சுமார் 2050 பங்கேற்பாளர்கள், அவர்களின் கேள்விகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.