டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து, வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் ஜோ பைடனே மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல, குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜோ பைடன் கூறுகையில், “ட்ரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் ஜனநாயகத்தை அழித்து விடுவார். வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நடத்தப்படும் யுத்தம்.
இத்தேர்தல் பிரசாரத்தின்போது ட்ரம்ப் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். ட்ரம்ப் தோல்வியடைந்து விட்டார். அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் தாக்குதல் நடந்ததற்கு அவர்தான் முழுப் பொறுப்பு.
தன்னை எதிர்ப்பவர்கள் மீது விஷம் கக்குகிறார். அமெரிக்கர்களின் ரத்தம் விஷமாகி விடுமென அவர் கூறுவது நாஜிக்களின் ஜெர்மனியை நினைவுபடுத்துவது போல் உள்ளது. ஆக்ரமிப்பு எண்ணம் கொண்ட வடகொரிய அதிபருடனும், ரஷ்ய அதிபருடனும், ட்ரம்ப் ஒட்டி உறவாடுகிறார்.
ஆகவே, ட்ரம்ப் வென்று அவர் உறுதியளிக்கும் எதிர்காலம் தோன்றினால், அங்கு ஜனநாயகம் தோற்று விடும். உங்கள் சுதந்திரம் உங்கள் வாக்குச்சீட்டில்தான் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அமெரிக்க ஜனநாயகத்தை நான் கட்டிக் காப்பேன் என்று உறுதி கூறுகிறேன்” என்று ஜோ பைடன் கூறியிருக்கிறார்.