அசாம் மற்றும் மணிப்பூர் எல்லை அருகே, நடந்த சோதனையின்போது, 1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அசாம் மாநிலத்தில், போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எடுத்து வருகிறார். அசாம், மணிப்பூர் எல்லை பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக, அசாம் ரைபிள் படையினர், மணிப்பூர் போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மணிப்பூர் போலீசாருடன் இணைந்து, அசாம் ரைபிள் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்தியதில், 1.137 கிலோ எடை கொண்ட போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.