தேனி வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தேனியில் உள்ள பெரும்பாலான அணைகள், குளங்கள், கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனை அடுத்து அணைகள் மற்றும் கண்மாய்களின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. குறிப்பாக, போடி, குரங்கணி, கொட்டக்குடி ஆகிய பகுதிகளில் பெய்த மழையால், கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் டுபட்டுள்ளனர். இதேபோல் சோத்துப்பாறை, கும்பக்கரை, பெரியகுளத்தில் தொடர் மழையால், வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இரு கரையையும் ஒட்டியவாறு தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது.
இதனால், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் சுற்றுவட்டார வராக நதி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிக்க வைக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 2 ஆயிரத்து 481 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.