நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா கிராமத்தில், சிறுத்தை ஒன்று கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வந்தது.
இந்நிலையில், மேங்கோ ரேஞ்ச் பகுதி அங்கன்வாடியில் இருந்து தனது 3 வயது குழந்தையை அழைத்துக்கொண்டு தாய் நேற்று நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது,தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின் கண்முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. தாயின் அலறல் சத்தத்தை கேட்ட தொழிலாளர்கள், தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர். பின் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி,பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.இதேபோல் சில நாட்களுக்கு முன் சிறுத்தை தாக்கி பழங்குடியின பெண் உயிரிழந்தார்.
இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க 6 கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க 2 கால்நடை மருத்துவர்கள் உட்பட 50- க்கும் மேற்பட்ட வனத் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அம்பரோஸ் பகுதியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் அந்த சிறுத்தை கூண்டில் அடைக்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது.