பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆம்னி பேருந்ததுகளின் கட்டணம் விமான கட்டணத்திற்கு இணையாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். ஆனால் கட்டணத்தை பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஒரு சில பேருந்துகளில் விமான கட்டணத்திற்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசு போக்குவரத்து தொழிலார்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாலும், மேலும் அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்வதாலும் ஏராளமானோர் ஆம்னி பேருந்தை நாடுகின்றனர். கிளாம்பாக்கம் செல்ல முறையான பேருந்து வசதி மற்றும் ரயில் வசதி இல்லாத காரணத்தால், வடபழனி, அசோக்நகர், கிண்டி கத்திப்பாரா, பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பயணம் செய்வோர் அரசு பஸ்களை விட தனியார் பேருந்துகளில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்.
அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன. அரசு பஸ்கள் மட்டும் தான் ஒரே வழி. இந்த நிலையில் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு தாமதத்தால் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்கின்றனர்.
ஆனால் வழக்கம் போல் எந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல் ஆம்னி பேருந்துகள் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இது தற்போது மட்டுமல்ல ஒவ்வொரு தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தொடர் கதையாகி வருகிறது. ஆனால் இதனை தடுக்க போக்குவரத்து துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மதுரை, திருநெல்வேலி மற்றும் தென் மாவட்ட பகுதிகளுக்கு வருகிற 12-ந்தேதி பயணம் செய்ய ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விமான கட்டணத்தை விட ஆம்னி பஸ் கட்டணம் அதிகமாக உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.