நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத்தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலைவிட கூடுதலாக 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது.
இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், திடீரென நிதீஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டார். ஆகவே, நிதீஷ் குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2024 மக்களவைத் தேர்தலில் பீகாரிலுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பீகாரில் பல்வேறு பேரணிகளில் உரையாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பிரச்சாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, ஜனவரி 15-ம் தேதிக்குப் பின்னர் முக்கிய பேரணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதன்படி, மாநிலத்தில் பெகுசராய், பெட்டியா, ஒளரங்காபாத் ஆகிய இடங்களில் பிரதமர் மோடி 3 பேரணிகளில் உரையாற்றுகிறார்.
அதேபோல, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீதாமர்ஹி, மாதேபுரா மற்றும் நாளந்தா ஆகிய இடங்களில் அமித்ஷா உரையாற்றுவார். ஜெ.பி.நட்டா சீமாஞ்சல் மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பேரணிகளை நடத்தவிருக்கிறார்.
அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரின் சம்பாரனில் இருந்து தனது மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்படி, ராமன் மைதானத்தில் நடைபெறும் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
மேலும், இப்பயணத்தின்போது, பிரதமர் மோடி பீகார் முழுவதும் சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பா.ஜ.க.வின் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் முன்னெடுத்துச் செல்வதால் , கட்சியின் மாநில அமைப்பு தலைவர் சாம்ராட் சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.