ஜல்லிகட்டு நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரணைக்கு பட்டியலிட பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்த்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் சட்டம் செல்லும் என கடந்த மே மாதம் தீர்ப்பு அளித்தது.
தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழாவின்போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு ஏறு தழுவுதல் விளையாட்டை பாரம்பரியத்தின் அங்கமாக அங்கீகரித்த மாநில அரசின் சட்டத்திருத்தத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒருமனதாக அளித்த தீர்ப்பில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெறும். மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு திகழ்வதாக மாநில அரசு வாதிட்டதை முழுமையாக ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி நடைபெற்று வருகிறது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது சில மாதங்களாக விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையிடப்பட்டது. இந்த மனுக்களை பரிசீலித்து, பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.