மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர இதுவரை தொகுதிக்கு திமுக எதுவுமே செய்ததில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை தர்மபுரி தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
அரிதாக தனக்கு கிடைத்த நெல்லிக் கனியை தான் உண்ணாமல் அதை தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு வழங்கிய கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சி ஆண்ட மண்.
அதியமானுக்கும் தமிழ் மூதாட்டி ஔவைக்கும் இருந்த நட்பு, தமிழ் மொழி மேல் அதியமானுக்கு இருந்த மரியாதை, அவனுடைய கொடை சிந்தனை எல்லாம் இந்த மண்ணில் இருந்து எழுகிற பண்பாட்டு அடையாளமாகும்.
அதியமான் மன்னர்கள் மாவீரர்களாகவும், நீதிமான்களாகவும், பக்திமான்களாகவும், கொடை வள்ளலாகவும் திகழ்ந்தார்கள். சர்வ வல்லமை பொருந்திய மல்லிகார்ஜுனர் கோவில், தர்மத்தை யுகங்களை கடந்து நிலை நிறுத்தும் கால பைரவர் கோவில் அருள்புரியும் பகுதி. வரலாற்று சின்னமாக அதியமான் கோட்டையும், தீர்த்தகிரிஸ்வரர் கோவிலும் இருப்பது நமக்குப் பெருமை. காஞ்சிபுரத்திற்கு பட்டு தயாரிக்க பட்டுக் கூடுகள் வழங்கும் பெருமை வாய்ந்தது தர்மபுரி.
தர்மபுரி மாவட்டத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பீடில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது. 31,336 பேருக்கு பிரதமரின் வீடு, 1,21,410 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,32,117 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,01,522 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 87,523 பேருக்கு, 1,84,039 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், தர்மபுரி மாவட்டத்திற்கு 3010 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என மத்திய அரசின் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் 10.76 லட்ச கோடி ரூபாய் நமது மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
தர்மபுரி மக்களின் 80 ஆண்டு கனவான தர்மபுரி மொரப்பூர் திட்டத்தை ரூ 358.95 கோடி நிதியில் செயல்படுத்த பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
கூடிய விரைவில் இந்த ரயில்வே பாதை கட்டி முடிக்கப்பட்டு விட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும். தொடர்ச்சியாக விபத்துகள் நடக்கும் தொப்பூர் பகுதியில் ரூ.775 கோடி ரூபாய் செலவில் பறக்கும் சாலை அமைக்கவுள்ளது நமது மத்திய அரசு.
மறைந்த DN வடிவேல் கவுண்டர் 1965ஆம் ஆண்டு தர்மபுரி தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அப்போது ஈவெரா பெரியார் விடுதலை பத்திரிகையில், தர்மபுரி வேட்பாளர்களே, கலவரக்காரர்களை ஆதரிக்காதீர்கள். திமுகவின் கூட்டுச்சதிக்கு இடம் தராதீர்கள்.
திமுகவுக்கு வாக்களித்தால் கலவரம் தான் வரும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட DN வடிவேல் கவுண்டர் வெற்றி பெற்றார். அவரது பேரன் தான் இன்றைய திமுக பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர இதுவரை தொகுதிக்கு எதுவுமே செய்ததில்லை.
இந்து மதத்தை விமர்சித்து மதக் கலவரத்தை தூண்டுவது, சமீபத்தில் வட நாட்டு சகோதர சகோதரிகளை மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் என்று பாராளுமன்றத்தில் பேசி, அதன் பின் நான் பேசியது தவறு என்று சொன்னது இதுதான் அவரது சாதனை. இப்படி தர்மபுரி மக்களுக்கு தொடர்ச்சியாக தலைகுனிவு ஏற்படுத்தியதற்கு இவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தர்மபுரியில் சிப்காட் அமைக்க நிலம் கொடுத்தவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று 14 வருடங்களாகக் காத்திருக்கிறார்கள். முதலீட்டாளர் மாநாடு நடத்தவிருக்கிறார்கள். அவற்றில் இரண்டு நிறுவனத்தையாவது தர்மபுரியில் முதலீடு செய்ய வேண்டும். இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும்.
2021ஆம் ஆண்டு வெளிவந்த சிஏஜி தணிக்கை அறிக்கையில் ரூ.1,334 கோடியில் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், திமுக ஆட்சியின் தவறான திட்டமிடல் மற்றும் தவறான செயல்படுத்துதல் காரணமாக ரூ.1,928 கோடி செலவு செய்தும், இந்த திட்டம் எதற்காகச் செயல்படுத்தப்பட்டதோ அந்த இலக்கை அடையவில்லை என்று தெரிவித்திருந்தார்கள். தற்போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட இரண்டாம் கட்டத்துக்கு மீண்டும் ரூ.4,500 கோடி செலவு செய்ய போவதாக அறிவித்துள்ளார்கள்.
தருமபுரிக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளான குளிர்பதனக் கிடங்குகள், மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் நிலையம், நவீன மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை, தருமபுரியில் சுற்றுச்சாலை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைக் கிராமங்களுக்கும் சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள், தருமபுரியில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நல்லாட்சி, மீண்டும் தொடர, தமிழகம் முழுவதும் துணையிருக்கும் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்தார்.