இலங்கை திரிகோணமலையில்1008 பானையில் பொங்கல் வைத்தும், 1500 பெண்கள் நடனமாடியும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பண்டைய தமிழர்கள் அறுவடை காலத்திற்கு பின்பு பொங்கல் பண்டிகையை கொண்டாட துவங்கினர். விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் கருவிகளையும் காளை மாடுகளையும், பசு மாடுகளையும் அறுவடை செய்த தங்களின் உணவு உற்பத்திகளையும் இவற்றிற்கு உறுதுணையாக இருக்கும் சூரியனை கருப்பொருளாக வைத்தும் வணங்கத் தொடங்கிய ஒரு பண்டிகையே பொங்கல் பண்டிகை.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அண்டை நாடான இலங்கையில் பொங்கல் பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. திரிகோணமலை சம்பூர் பகுதியில் கடந்த 6ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியுடன் பொங்கல் பண்டிகை தொடங்கியது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 300க்கும் மேற்பட்ட காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். பொங்கல் விழா ஒரு வாரம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக பொங்கல் கலாச்சார விழா இன்று (ஜன.08) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரிகோணமலை ஹிந்து கல்லூரி மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற விழாவில், வண்ண கோலமிட்டு 1008 பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. மேலும், 1500 பெண்கள் நடனமாடினர்.