ஒவ்வொரு பண்டிகையிலும் ஒவ்வொரு உணவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். அந்தவகையில் ஒரு பண்டிகைக்கு பெயரே ஒரு உணவின் பெயரில் இருக்கிறது என்றால் அது பொங்கல் தான்.
பொங்கல் பண்டிகைப் போலவே பொங்கல் உணவும் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு தான். பொங்கல் பண்டிகைக்கு பொங்கலை பற்றி பேசவில்லை என்றால் எப்படி ? இப்போது பொங்கலின் வகைகளை பற்றி பார்ப்போம்.
சர்க்கரை பொங்கல் :
இதன் செய்முறை மிகவும் எளிமையாக இருந்தாலும், சுவை நிறைந்தது. இதில் இனிப்பு சுவைக்காக வெல்லம் சேர்க்கப்படுவதால் இரும்பு சத்து நிறைந்ததாக இருக்கும். பச்சரிசி மற்றும் பாகு வெல்லம் பயன்படுத்தி பொங்கல் செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
பால் மற்றும் தண்ணீர் கலவை கொதித்து பொங்கி வரும் போது அரிசி பருப்பு சேர்த்து குழைய வேக வைக்க வேண்டும். பின் வெல்லம், நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை, எல்லாம் சேர்த்து சரியான பக்குவத்தில் செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வசதிக்கு ஏற்ப பிரஷர் குக்கர் அல்லது பானையில் பொங்கல் வைக்கலாம்.
பால் பொங்கல் :
இது வெள்ளை பொங்கல் என்றும் அறியப்படுகிறது. இந்த பொங்கல் செய்வதற்கு அரிசியை பாலில் வேகவைக்க வேண்டும். இதன் மேல் நெய் தூவி சாம்பார் அல்லது பொங்கல் ஸ்பெஷல் காய்கறி கூட்டுடன் பரிமாறலாம்.
கற்கண்டு பொங்கல் :
இது அரிசி, பாசிப்பருப்பு, நெய் மற்றும் கல்கண்டை மூலமாக கொண்டு தயாரிக்க படுகிறது. இதில் இனிப்பு சுவைக்காக வெல்லத்திற்கு பதிலாக கல்கண்டு பயன்படுத்தபடுகிறது. நீங்கள் விரும்பினால் இதில் பாலில் ஊரவைத்த குங்குமப்பூவையும் சேர்க்கலாம்.
வெண்பொங்கல் :
குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் பிடிக்கும் என்றாலும், வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவது இந்த வெண்பொங்கலை தான். அதுவும் சாம்பார் மற்றும் பொங்கல் கூட்டுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். இதில் சேர்க்கப்படும் இஞ்சி, மிளகு மற்றும் பெருங்காயம் செரிமானத்திற்கு உதவுகின்றன. தண்ணீர் அளவுகளை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும் இந்த பொங்கலை சுலபமாக செய்திடலாம்.
கருப்பட்டி பொங்கல் :
இது அரிசி, பருப்பு மற்றும் கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படுக்கிறது. இது ஆரோக்கியமானது. ஏனெனில் இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளது.
கரும்பு சாறு பொங்கல் :
கரும்பு சாறை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பொங்கல் கூடுதல் சுவையுடன் இருக்கும். வீட்டில் கரும்பு மீதம் இருக்கும் போது இதை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசன இந்த பொங்கலை நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சிறுதானிய பொங்கல் :
அரிசிக்கு பதிலாக வரகு, சாமை போன்ற தானியங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான பொங்கல் செய்யலாம். இதனை கொண்டு இனிப்பு மற்றும் வெண்பொங்கலும் செய்ய முடியும்.
இப்படி ஆரோகியமான பல வகை பொங்கலை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுங்கள்.