வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கோபத்தில் ரசிகர் ஒருவரை பளாரென அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வங்கதேசம் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன். 2006ஆம் ஆண்டு முதல் வங்கதேச அணிக்காக விளையாடி வரும் ஷகிப் அல் ஹசன், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற எந்த வடிவிலான போட்டியாக இருந்தாலும், ஷகிப் அல் ஹசனை நம்பியே அந்த அணி இருந்து வந்தது. சமீபத்தில் அதிக முறை உலகக்கோப்பை தொடரில் ஆடிய வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில் 36 வயதாகும் ஷகிப் அல் ஹசன், தற்போது அரசியல் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே வங்கதேச அணியின் கேப்டனாக இருந்த மோர்டசா, ஆளும் கட்சியிம் எம்பி-யாக இருந்து வருகிறார். அவரை தொடர்ந்து வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், மகுரா வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ஷகிப் அல் ஹசன் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றார்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், ஷகிப் அல் ஹசனை சுற்றிய ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர். அப்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஷகிப் அல் ஹசனிடம் ரசிகர்கள் எல்லை மீற, திடீரென ரசிகர் ஒருவருக்கு பளாரென அறை கொடுத்தார்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே வங்கதேச உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ-விற்கு அவுட் கொடுக்காத போது அம்பயரை தரக் குறைவாக விமர்சித்ததோடு, ஸ்டம்புகளையும் கால்களால் உதைத்து தள்ளினார்.
தொடர்ந்து இதேபோல் மற்றொரு முறை நடக்க ஸ்டம்புகளை தூக்கி எறிந்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் கோபத்தை கட்டுப்படுத்த அறிந்து கொள்ள வேண்டும் என்றதோடு, ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
அதன்பின் ரசிகர் ஒருவரை பேட்டை வைத்து மிரட்டியது என்று அவரின் கோபம் எல்லை மீறி கொண்டே இருந்தது. தற்போது எம்பி-யாக வெற்றிபெற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ரசிகரை அடித்துள்ள சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனங்களை அதிகரித்துள்ளது.