அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பிரசவம் பார்க்குமாறு ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு குழந்தை பிறக்கும் நேரமும் தருணமும் சிறப்பு வாய்ந்தது. குழந்தையின் வாழ்க்கையின் நிலையும், திசையும் அவர் பிறந்த நேரத்திலிருந்து கணிக்கப்படுகிறது. குழந்தையின் எதிர்காலம் பிறந்த நேரத்தின் மூலம் நிச்சயிக்கப்படுகிறது என்று கூட கூறலாம்.
எனவே நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர். அதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட நாளில் பிரசவம் வைத்துக்கொள்பவர்களும் உண்டு.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பிரசவம் பார்க்குமாறு ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியின் கீழ் உள்ள தாய் சேய் மருத்துவமனை மருத்துவர்களிடம் பல கர்ப்பிணிப் பெண்கள் ஜனவரி 22 ஆம் தேதி சிசேரியன் மூலம் பிரசவம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு மட்டுமின்றி பல தனியார் மருத்துவமனைகளுக்கும் இது போன்ற கோரிக்கைகள் வந்துள்ளன.
ஜனவரி 22ஆம் தேதி 35 சிசேரியன் அறுவை சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் சீமா திவேதி தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் பிறந்தால், ராமருக்கு இருக்கும் அதே குணங்கள் தங்கள் குழந்தைக்கு இருக்கும் என தாய்மார்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்து ஜோதிடத்தின்படி, ஜனவரி 22ஆம் தேதி சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. காலை 11:51 மணி முதல் 12:33 வரை நல்ல நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சிவபெருமான் திரிபுரசுரன் என்ற அரக்கனை வதம் செய்ததால் நல்ல நேரம் என நம்பப்படுகிறது. இந்து புராணங்களின்படி, இந்த காலம் ஒருவரது வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றல்களை நீக்கும் என கூறப்படுகிறது.