அமெரிக்கா வெள்ளை மாளிகையின் வெளிப்புற கதவின் மீது வாகனம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை என்பது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்குதான் அமெரிக்கா அதிபர் வசிக்கிறார். ஆகவே, வெள்ளை மாளிகையின் மேற்பரப்பில் விமானம் பறப்பதற்குக்கூட தடை செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், வெள்ளை மாளிகைக்கு பல அடுக்கு பாதுகாப்பு உண்டு. 24 மணி நேரமும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். இந்த சூழலில், இவ்வளவு பாதுகாப்பு வளையத்தையும் மீறி நேற்று ஒரு கார் வெள்ளை மாளிகையின் வெளிப்புறக் கதவின் மீது மோதி இருக்கிறது.
அதாவது, நேற்று மாலை ஒரு மர்ம கார் வெள்ளை மாளிகையை நோக்கி வந்தது. அந்தக் காரை ஓட்டி வந்தவர் திடீரென வெள்ளை மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற நுழைவு வாயில் மீது பயங்கரமாக மோதினார்.
இதைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். இது தற்செயலாக நடந்த விபத்தா? அல்லது சதி செயலா? என்பது தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இச்சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையை பாதுகாக்கும் அமெரிக்க ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் ஆண்டனி குக்லீல்மி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “உள்ளூர் நேரப்படி மாலை 6 அணியளவில் வெள்ளை மாளிகையில் வெளிப்புற கதவின் மீது ஒரு வாகனம் மோதியது.
அந்த வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த மோதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.