சொகுசு விடுதி கட்டுமான முறைகேடு தொடா்பான பண மோசடி வழக்கில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. ரவீந்திர வாய்கா் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கிழக்கு ஜோகேஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரவீந்திர வாய்கர். சிவசேனா உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த இவர், தனது தொகுதியிலுள்ள ஜோகேஸ்வரி பகுதியில் மும்பை மாநகராட்சி சாா்பில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், சட்டவிரோதமாக அனுமதி பெற்று 5 நட்சத்திர விடுதி கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடா்பாக, ரவீந்திர வாய்கா் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், பண மோசடி தொடர்பாக ரவீந்திர வாய்கர் வீடு, அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான வளாகங்கள் உள்பட 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.