லட்சத்தீவில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவு பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.இது பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே மாலத்தீவு அமைச்சர்களான மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் மஹ்சூம் மஜித் லட்சத்தீவு குறித்து சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், இதற்கு அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது.
லட்சத்தீவில் உள்ள மினிகாய் தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவ விமானங்கள் செல்லும் வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போர் விமானங்கள், ராணுவ போக்குவரத்து விமானங்கள் மற்றும் வணிக விமானங்களை இயக்கும் திறன் கொண்ட கூட்டு விமானநிலையத்தை உருவாக்க திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
மினிகாய் தீவுகளில் ஒரு புதிய விமானநிலையத்தை உருவாக்கும் திட்டம் ஏற்கனவே முன்மொழியப்பட்டது. இந்த முடிவு லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்துவதையும், இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் நாட்டின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அரசாங்கத்தின் திட்டங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பிராந்திய சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தும். தற்போது, லட்சத்தீவின் அகட்டியில் ஒரே ஒரு விமான ஓடுதளம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.