காஞ்சிபுரம் மாவட்டம் காரைப்பேட்டையில் வசித்து வருபவர் ஜேக்கப். வயது 62. இவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ஆவார்.
மேலும், இவர் திராவிட கட்சி ஒன்றில் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மூத்த மகன் ஆனந்த் காஞ்சிபுரம் காரைப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக உள்ளார்.
கடந்த 7-ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற ஆனந்த், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மகனின் மொபைலுக்கு தொடர்பு கொண்ட போது, அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செட்டியார்பேட்டை பகுதியில் தலை கழுத்து என பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வௌ்ளத்தில் ஒருவர் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற ஜேக்கப், அது தனது மகன் ஆனந்த் என உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆனந்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆனந்த் இடைத்தரகராக உள்ள அலுவலகத்தில், மற்றொரு இடைத்தரகரான அப்புவுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த மோதல், ஜனவரி 7 -ம் தேதி அன்று, ஆனந்த்துக்கும், அப்புவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றி, அது கை கலப்பில் முடிந்துள்ளது. இதனால், இந்த கொலைக்குப் பின்பு அப்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், போலீசாரின் தேடலை அறிந்த அப்பு தலைமைறைவாகிவிட்டார்.