மகாராஷ்டிராவில் முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது என்று சபாநாயகர் ராகுல் நர்வேகர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணி உடைந்தது.
இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவரது மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
ஒருபுறம் பொருந்தாக் கூட்டணி, இன்னொருபுறம் மகனுக்கு அமைச்சர் பதவி என்பதால், இந்த விவகாரம் கட்சிக்குள் புயலைக் கிளப்பியது. மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டேவுக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்து வந்தது.
இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே கடந்த 2022-ம் ஆண்டு கட்சியில் இருந்து பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இதையடுத்து, கட்சித் தாவல் சட்டப்படி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருடன் சென்ற ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பில் சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதேசமயம், உத்தவ் தாக்கரே அணியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படி ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரிக்கை விடுத்தது. இதன் காரணமாக, சிவசேனா கட்சியின் மொத்தமுள்ள 54 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்க விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்கள்.
இதனிடையே, தகுதி நீக்க விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
எனவே, இது குறித்து இறுதி முடிவெடுக்கும்படி சபாநாயகருக்கு எச்சரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கெடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே உட்பட 54 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை சபாநாயகர் ராகுல் நார்வேகர் இன்று அறிவித்தார்.
அதன்படி, “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டேயை சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை ஏற்கவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிதான் உண்மையான சிவசேனா” என்று தெரிவித்தார்.
சபாநாயகரின் இந்த அதிரடியால் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.