காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவுவதால், எதிரிகள் மறைமுக யுத்தத்தில் ஈடுபடுவதாக ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த 5-6 மாதங்களில் ரஜோரி மற்றும் பூஞ்ச்சில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகள் கவலை அளிக்கும் பிரச்சினையாக உள்ளது. 2003ஆம் ஆண்டு வாக்கில் அங்கு பயங்கரவாதம் முழுமையாக பரவியது.
2017-18 முதல் அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டது. இதனால் எதிரிகள் மறைமுக யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.எல்லைக்கு அப்பால் இருந்து ரஜோரி பூஞ்ச் செக்டரில் மறைமுக யுத்தத்திற்கான ஆதரவு தொடர்கிறது.ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்துவதற்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன
பொருளாதார ரீதியில் நமது நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. இதற்கு உதவும் வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்ய பணியாற்றி வருகிறோம்.
அரசின் கொள்கை காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைந்து வருகிறது. வன்முறை சம்பவங்கள் குறைந்து வருகின்றன. கடந்த ஆண்டு மணிப்பூரில் கலவரம் நடந்தாலும், மாநில நிர்வாகம், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையுடன் இணைந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்குள்ள சூழ்நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் பணியாற்றி வருகிறோம்.
எல்லையில் 2020க்கு முன்பு இருந்த நிலைமை திரும்ப சீனாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்வதே எங்களின் முயற்சியாகும். இதில் தீர்வு கிடைத்தால் மட்டுமே, படைகளை திரும்ப பெற முடியும். அதுவரை எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தேவைப்படும் இடங்களில் படைகளை நிலைநிறுத்துவோம் என மனோஜ் பாண்டே கூறினார்.