இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் எக்ஸ்போ சாட்டிலைட் முதல் முறையாக விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கி.மீ. உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
அதேபோல் காலநிலை பற்றிய ஆய்வுகளுக்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த ‘வெசாட்’ என்ற செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் அதே ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்நிலையில் விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை எக்ஸ்போ சாட் முதன்முறையாகச் சேகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் நோவா உமிழ்வு என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டம் வெடிக்கும் நிகழ்வு குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரோ கூறியுள்ளது.
காசியோப்பியா எ (“Cassiopeia A”) என்ற விண்மீன் கூட்டத்தை எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது. இது சூரிய குடும்பத்திற்கு வெளியே இஸ்ரோவின் செயற்கைக்கோள் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள் ஆகும்.
பதிவு செய்யப்பட்டுள்ள இந்த விண்மீன் வெடிப்பு சுமார் 11 ஒளியாண்டுகள் தொலைவில் நிகழ்ந்துள்ளது.