மும்பையில் கட்டப்பட்டிருக்கும் நாட்டின் மிக நீளமான கடல்வழிப் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும், ‘பாரத் ரத்னம்’ என்கிற நகைத் தொழில் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையையும், நவிமும்பையையும் இணைக்கும் வகையில், 17,000 கோடி ரூபாயில் அரபிக்கடலில் 22 கி.மீ. தொலைவுக்கு பிரம்மாண்ட பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இப்பாலத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமானப் பணிகள் 2018 ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்தது. இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.
நாட்டின் மிக நீளமான கடல்வழிபாலம் என்ற சிறப்பை பெற்ற இப்பாலம், மும்பையின் சிவ்ரியில் தொடங்கி நவிமும்பையின் புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் இப்பாலம் அமைக்கப்பட்டிருப்பதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்’ என்று அழைக்கப்படுகிறது.
எனினும், இப்பாலத்துக்கு ‘அடல் சேது’ என்று மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்பாலம், மும்பை – நவிமும்பை இடையேயான 15 கி.மீ. பயண தூரத்தையும், 1 முதல் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக பயண நேரத்தையும் குறைக்கிறது. இந்தப் பாலத்தில் இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
இந்த பிரம்மாண்ட பாலத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, ‘பாரத் ரத்னம்’ என்கிற நகைத் தொழில் திட்டத்தை தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதையொட்டி, இன்று காலை மகாராஷ்டிராவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, நாசிக்கில் பிரம்மாண்ட ரோடு ஷோவையும் நடத்தினார்.
#WATCH | Prime Minister Narendra Modi holds a roadshow in Nashik, Maharashtra. pic.twitter.com/WnZi6hPT2B
— ANI (@ANI) January 12, 2024