மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையின் அமைச்சராக இருப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஜித் போஸ். இவர், மேற்கு வங்க மாநிலத்தில் நகராட்சி அமைப்புகளில் வேலைக்கு ஆட்களை சேர்த்ததில் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, நகராட்சி அமைப்புகளில் முறைகேடாக வேலை வழங்கியது குறித்து விசாரணை நடத்தும்படி கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. இதன் பிறகு, இதுகுறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ரதின் கோஷுக்கு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த நிலையில், அமைச்சர் சுஜித் போஸ் மற்றும் இம்மோசடியில் தொடர்புடையதாகக் கருதப்படும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தபாஸ் ராய், முன்னாள் நகராட்சித் தலைவர் சுபோத் சக்ரவர்த்தி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 6.40 மணியில் இருந்து இச்சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் லேக் டவுன் பகுதியில் உள்ள சுஜித் போஸின் 2 வீடுகள், பி.பி.கங்குலி தெருவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தபஸ் ராயின் வீடு மற்றும் சுபோத் சக்ரவர்த்தியின் வீட்டிலும் சோதனைகள் நடைபெறுகின்றன.
மேலும், சோதனை நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷன் ஊழல் வழக்கு தொடர்பாக பாங்கோன் நகராட்சியின் முன்னாள் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரது ஆதரவாளர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பின்னர் 17 மணி நேர சோதனைக்குப் பிறகு சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.