கே.ஜே.யேசுதாஸ், இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் ஒரு மாமனிதர். காரணம், தனது வசீகர குரலால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கட்டிப்போட்டவர்.
கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக பிறந்தவர் யேசுதாஸ். அவரது தந்தை மலையாளத்தில் பிரபல செவ்விசைக் கலைஞர் ஆவார். யேசுதாஸ் ஆரம்பத்தில், இசைப்பயிற்சியை தந்தையிடமே கற்றார். பின்னர் இசைக்கல்லூரியில் பயின்றார்.
யேசுதாஸ் தனது திரைப்பட வாழ்க்கையை கால்பாடுகள் மலையாளத் திரைப்படம் மூலம் துவங்கினார். இந்த படத்திலேயே தனது முதல் பாடலை பாடினார். அன்று துவங்கய அவரது கலைப்பயணம் இன்று வைர தொடர்கிறது. இதுவரை 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், உருசியா, அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய பல்வேறு மொழிகளில் 50,000 பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.
சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகராக 7 முறை தேசிய விருதும், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா , மேற்கு வங்க அரசுகளிடம் 45 முறை சிறந்த திரைப்பாடகராகவும் விருதுகள் பெற்றுள்ளார்.
யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத், விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் போலவே திரைப்படப் பாடகராக உள்ளார். ஆரம்பத்தில் சென்னை மற்றும் திருவனந்தப்புரத்தில் வசித்து வந்த யோசுதாஸ், தற்போது, ஐக்கிய அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
கடந்த 10-ம் தேதி யேசுதாஸ்-க்கு பிறந்த நாள். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் மறக்காமல் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். காரணம், யேசுதாஸ் தீவிர ஐயப்ப பக்தர் ஆவார். இந்த நிலையில், இந்த ஆண்டு, அவரது பிறந்த நாளையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் பிரசாதம், யேசுதாசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
யேசுதாசின் பாடல்கள் ஒலித்த பின்புதான் ஐயப்பன் கோவிலில் காலை நடை திறப்பதும், இரவு நடை சாத்துவதும் வழக்கம்.