மேற்குவங்க மாநிலம் புருலியாவில் சாதுக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இந்து சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 சாதுக்கள் மகர சங்கராந்தி விழாவுக்காக மேற்குவங்கத்தின் கங்காசாகருக்குச் சென்றனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற 3 சிறுமிகளிடம் சாதுக்கள் வழி கேட்டிருக்கிறார்கள்.
இதனால் பயந்துபோன அச்சிறுமிகள், சத்தம் போட்டுக் கொண்டே அலறியடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடி இருக்கிறார்கள். இதைக்கண்ட புருலியா மக்கள், குழந்தைத் திருடர்கள் என்று கூறி சாதுக்களை தாக்கி இருக்கிறார்கள்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைக் கண்ட பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் பலரும் சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், “இந்து துறவிகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் கொடிய தாக்குதல் நடத்தியதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேற்குவங்கத்தின் ஒவ்வொரு மூலையிலும் காளி அன்னை வசிக்கிறாள். வங்காள நிலம் சுவாமி விவேகானந்தர் தொடங்கி பல ஆன்மீக குருக்களால் தாக்கம் பெற்றுள்ளது. ஒரு சில முஸ்லீம் வாக்குகளுக்காக அதே வங்காளத்தில் மம்தா பானர்ஜி இந்துக்களுக்கு எதிரான சூழலை உருவாக்கிய விதம் மிகவும் வருந்தத்தக்கது.
காளி மாதாவின் பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டு அவமதிக்கப்படுகின்றன. இந்து நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தொழிலாளர்களை உயிரோடு எரிக்கிறார்கள். இக்கொடுமையை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பா.ஜ.க. ஐ.டி. குழுத் தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மேற்குவங்கத்தில் சாதுக்கள், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய குண்டர்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர்.
மம்தா பானர்ஜியின் ஆட்சியில், ஷாஜஹான் ஷேக் போன்ற தீவிரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கிறது. அதேசமயம், சாதுக்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். மேற்குவங்கத்தில் இந்துவாக இருப்பது குற்றம்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில், “மேற்குவங்கத்தில் சாதுக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை என்ன? விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் முதல் சாதுக்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இதுதான் மேற்குவங்கத்தின் அதிர்ச்சியான நிலை” என்று கூறினார்.