ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில் காவலர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்து பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
சென்னை -ஆவடி காவல் ஆணையர் சங்கர் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது குடும்பத்தினர் பாரம்பரிய உடையில் வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அப்போது, மேளம் தாளம் முழுங்க சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நுழைவாயிலில் கரும்பு வாழை, தோரணங்களுடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
புது பானையில் பச்சரிசி வெல்லம் முந்திரி திராட்சை நெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு டிஜிபி சங்கர் ஜிவால் தனது குடும்பத்தினருடன் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், காவலர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து விழாவில் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான துப்பாக்கி சுடுதல், வில் அம்பு, கயிறு இழுத்தல், சைக்கிள் போட்டி மியூசிக்கல் சேர், பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். காவலர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.