செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதல் 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இதையடுத்து, லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதேபோல, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மீது செங்கடல் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
அதேசமயம், அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை செங்கடலில் நிலை நிறுத்தி வைத்துக்கொண்டு ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இடைமறித்து அழித்து வந்தது.
மேலும், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல, ஐ.நா. மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும், இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தினர்.
எனினும், இந்த எச்சரிக்கையை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் புறக்கணிக்கவே, அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.
இந்த நிலையில்தான், செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார். காரணம், ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நாட்டின் ஆதரவு இருக்கிறது.
ஈரான் செல்லும் அமைச்சர் ஜெய்சங்கர், நாளை செங்கடலின் நிலைமை குறித்தும், இருதரப்பு நட்புறவு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்தும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.