டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி பங்கேற்றார்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி பங்கேற்று பொங்கல் வைத்தார்.
கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, புதிய தானியங்களை பொங்கல் திருநாளில் இறைவனுக்கு படைப்பது வழக்கம். சிறுதானிய உற்பத்தியில் 3 கோடி விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வண்ணமிகு ரங்கோலி கோலத்தை போன்றது நமது நாட்டின் கலாசாரம். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் இணைந்து செயல்படும்போது நாடு வளம் பெறும், 2047ல் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ., சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், நடிகை மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.