இராமர் கோவிலுக்காக 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி, 30 ஆண்டுகாலம் மௌனவிரதம் இருந்து வருவது நம்மை வியக்க வைக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி தேவி. 1986-ம் ஆண்டு கணவனை இழந்த சரஸ்வதி தேவி, தனது வாழ்க்கையை ஸ்ரீராமருக்காக அர்பணித்து விட்டு, பல்வேறு கோவில்களுக்கு யாத்திரைகள் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த சூழலில், கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது, இராமரின் தீவிர பக்தையான சரஸ்வதி தேவி, அயோத்தி இராமஜென்ம பூமியில் இராமர் கோயில் கட்டப்படும்வரை மௌனவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, 2020-ம் ஆண்டு வரை தினமும் 23 மணி நேரம் மௌனவிரதம் இருந்து வந்திருக்கிறார். மதியம் 1 மணி நேரம் மட்டும் பேசுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஆனால், 2020-ல் இராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதன் பிறகு, 24 மணி நேரமும் மௌனவிரதம் இருந்து வருகிறார். இன்றுவரை சைகை மொழியிலும், கடினமான வார்த்தைகளை காகிதத்தில் எழுதிக் காண்பித்தும் வருகிறார்.
மேலும், 2001-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்திரகூட்டில் 7 பாதங்களுக்கு தவத்தில் ஈடுபட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அயோத்திக்கு தனது பயணத்தைத் தொடங்கிய சரஸ்வதி தேவி, தற்போது இராமஜென்ம பூமியை வந்தடைந்திருக்கிறார். ஜனவரி 22-ம் தேதி இராமஜென்ம பூமியில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் சரஸ்வதி தேவி தனது மௌனவிரதத்தை முடித்துக் கொள்ளவிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, சரஸ்வதி தேவி ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரங்கள் வரை தியானம் செய்வதாகவும், ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாகவும், அதுவும் சைவ உணவுகள் மட்டுமே உண்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடவுள் மீது சிலர் இப்படியும் பக்தி கொண்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.