கடந்த 10 ஆண்டுகளாகவே, நாட்டில் எந்த நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் அதை புறக்கணிப்பதை எதிர்கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம், இராம் லல்லா சிலை பிரதிஷ்டை, திறப்பு விழா ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகின்றன.
இதையொட்டி, ஜனவரி 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களை சுத்தம் செய்யுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, நாட்டில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் உள்ளிட்டோர் கோவில்களை சுத்தம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், புதுடெல்லி மந்திர் மார்க்கில் அமைந்திருக்கும் வால்மீகி கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும், டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவாவும் ஈடுபட்டனர்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி பலனளிக்கத் தொடங்கி இருக்கிறது. நாட்டு மக்கள் தங்களது வழிபாட்டுத் தலங்களை தூய்மை செய்வதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி நடத்திய சுந்தரகாண்டம் பாராயணம் அரசியல் ஆதாய நிகழ்வாகும். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியிலுள்ள கோவில்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்தார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இராம பக்தர்களை இராமரிடம் இருந்து விலக்கி வைக்கும் காங்கிரஸ் கட்சியின் முயற்சி மிகவும் மோசமானது. ஆகவே, காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள். அதேபோல, எப்போது பார்த்தாலும் சனாதனத்தை இழிவுபடுத்துவது மற்றும் ஒழிப்பது பற்றியே இண்டி கூட்டணி பேசி வருகிறது.
ஸ்ரீராமரைப் பற்றி எதிர்கட்சிகள் எவ்வளவு பேசினாலும் கடைசியில் அவர்கள் ஸ்ரீராமரிடம்தான் அடைக்கலம் புக வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் அவற்றை புறக்கணிப்பதை எதிர்கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
இதுபோன்ற காரணங்களுக்காகவே மக்கள் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்கிறார்கள். இதை காங்கிரஸ் கட்சியினர் அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா, பிரதமர் மோடியின் உரை, மகரிஷி வால்மீகி விமான நிலையம், வந்தே பாரத் இரயில்கள் ஆகிவற்றை புறக்கணித்தனர்.
தற்போது அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கின்றனர். இதனால் மக்கள் தங்களை மீண்டும் புறக்கணிக்கலாம் என்று எதிர்கட்சியினர் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்” என்றார்.