உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அயோத்திக்கென சிறப்பு வானிலை இணையதளத்தை (https://mausam.imd.gov.in/ayodhya/) இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில், அயோத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வானிலை நிலவரங்களை மட்டும் கூறும் வகையில், சிறப்பு வானிலை இணையதளத்தை (https://mausam.imd.gov.in/ayodhya/) இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கி உள்ளது.
இந்த வானிலை இணையதளத்தில், வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்றின் திசை, காற்றின் வேகம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளியாகும். இதில், அயோத்தி, பிரயாக்ராஜ், வாராணசி, லக்னோ, புதுடெல்லி உள்ளிட்ட பகுதிகளின் வானிலை நிலவரங்கள் வெளியிடப்படும்.
உலகில் அதிக மக்களால் பேசப்படும் இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், உருது, சீனம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் வானிலை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.