குஜராத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹர்னி மோட்நாத் என்னும் பிரசித்தி பெற்ற ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரிக்கு பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர். பின்னர், ஆசிரியர்கள், மாணவர்கள் என 27 பேர் ஒரு படகில் புறப்பட்டுச் சென்றனர்.
ஏரியின் மையப் பகுதிக்குச் சென்றபோது திடீரென அப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு மீட்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், இந்த விபத்தில் 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 16 பேர் உயிரிழந்து விட்டனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். மாயமான மற்றொரு மாணவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, குஜராத் முதல்வர் பூபேந்திர பாய் படேல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். இச்சம்பவம் குறித்து வதோதரா எம்.பி. ரஞ்சன்பென் கூறுகையில், “மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.