ஆறு பிரிவுகளில் சிறப்பான சாதனை படைத்த 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை ஜனவரி 22 அன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார். விருது பெற்றவர்களுடன் ஜனவரி 23 அன்று பிரதமர் கலந்துரையாடுகிறார்
புதுடெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை ஜனவரி 22 அன்று வழங்குகிறார்.
விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23 அன்று கலந்துரையாடுவார்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் இரானியும், இணை அமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாயும் குழந்தைகளுடன் கலந்துரையாடி, அந்தந்தப் பிரிவுகளில் முன்மாதிரியான செயல்திறனுக்காக அவர்களை வாழ்த்துவார்கள்.
கலை மற்றும் கலாச்சாரம் (7), வீரம் (1), புதுமை (1), அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (1), சமூக சேவை (4), விளையாட்டு (5) ஆகிய ஆறு துறைகளில் தனித்துவமான சாதனைகளுக்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருது வழங்கப்படும்.
18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 2 முன்னேற விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த 9 சிறுவர்களும், 10 மாணவிகளும் விருது பெறுகின்றனர்.
குழந்தைகளின் தனித்துவமான சாதனைக்காக பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் ஏழு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்ளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை & கலாச்சாரம், வீரம், சுற்றுச்சூழல், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் & தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு ஆகியவை தேசிய அங்கீகாரத்திற்குத் தகுதியான துறைகளாகும். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.