ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நேற்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமர் மோடி, இன்று காலை விமானம் மூலம் ஸ்ரீரங்கம் சென்றார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ராமானுஜர், சக்கர்த்தாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளில் அவர் தரிசனம் செய்தார். பின்னர் கோயில் மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாடிய கம்பராமாயணத்தை அவர் கேட்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் விமானம் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பாஜக தொண்டர்கள் மலர்களை தூவி அவரை வரவேற்றனர். அப்போது காரில் நின்றவாறு கையசைத்தபடி வரவேற்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து ராமநாதசாமி கோவில் சென்ற பிரதமர் அங்கு வழிபாடு செய்து வருகிறார். 22 புனித தீர்த்தங்களிலும் பிரதமர் நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இன்று இரவு பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் தங்குகிறார். நாளை தனுஷ்கோடி மற்றும் கோதண்ட ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.