அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்க்குமாறு பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“ஜனவரி 22-ம் தேதி, அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கையும் சீர்குலைக்கும், சில சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலியான செய்திகள் ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட வாய்ப்புள்ளது.
தொலைக்காட்சிகளுக்கான நிகழ்ச்சி விதிகள் குறித்து கேபிள் டிவி நெட்ஒர்க்குகள் ஒழுங்குமுறைச் சட்டம் தெளிவுபடுத்துகிறது. அதேபோல், பத்திரிகைகளுக்கான ஒழுங்கு விதிகளை பிரஸ் கவுன்சில் சட்டத்தின் கீழ் இந்திய பிரஸ் கவுன்சில் வகுத்துள்ளது. அதோடு, சமூக ஊடகங்களுக்கென தகவல் தொழில்நுட்பம் (வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்) விதிகள் நடைமுறையில் உள்ளன.
இவற்றைக் கருத்தில் கொண்டு, செய்தித்தாள்கள், தனியார் தொலைக்காட்சி சேனல்கள், நடப்பு விவகாரங்களை வெளியிடுபவர்கள் செயல்பட வேண்டும்.
தவறான, மதநல்லிணக்கத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் செய்திகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலே குறிப்பிட்ட வகையிலான செய்திகள் வெளியாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சமூக ஊடக நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.