ராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை சென்ற பிரதமர் மோடி, கடற்கரையில் வண்ண மலர்கள் தூவி வழிபாடு செய்தார்.
தனுஷ்கோடி கடற்கரை இராமேஸ்வரம் தீவின் முனையில் அமைந்துள்ளது.இந்த கடற்கரையில், வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் ஒன்றிணைகின்றன. இப்பகுதி அரிச்சல் முனை என்று அழைக்கப்படுகிறது
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி (கடல்) தீர்த்தமும், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சேது (கடல்) தீர்த்தமும் பிரதான தீர்த்தங்களாகும். மேலும் அரிச்சல் முனை இராமர் சீதையுடன் முதலில் கால் வைத்த பூமி எனவும் கூறப்படுகிறது. இந்த தீர்த்தங்களில் நீராடுவதால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இங்கு புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் தங்கிய பிரதமர் மோடி இன்று காலை அரிச்சல்முனை சென்றார். கூடைகளில் இருந்த பல வண்ண பூக்களை கடற்கரையில் வைத்து பூஜை செய்த பிரதமர், அங்கு கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக கடந்த 11 நாட்களாக விரதம் கடைபிடித்து வரும் பிரதமர் மோடி, அரிச்சல் முனையில் இருந்து தீர்த்தம் எடுத்து செல்கிறார். மேலும் அங்கு உள்ள புனித தூணிற்கும் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செய்தார்.
இதனைத்தொடர்ந்து கோதண்டராமர் கோவிலில் வழிபாடு செய்கிறார். பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
டெல்லி செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து அயோத்தி செல்கிறார். அயோத்தியில் நாளை நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.