சென்னை வந்த பிரதமர் மோடியை நடிகர் அர்ஜூன் சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரி 19ஆம் தேதி தமிழகம் வந்தார்.நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அன்று இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கினார். அப்போது பல முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்தனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் அர்ஜுனும் தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்றும், அவர் வந்திருந்ததை கேள்விப்பட்டு சந்திக்க நேரம் கேட்டதாகவும், உடனடியாக அவரைப் பார்க்க அனுமதி கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை முதல் முறையாக நேரில் சந்திப்பதாகவும், தமக்கு மிகவும் பிடித்த ஆளுமை பிரதமர் மோடி என்றும் அவர் தெரிவித்தார். தனது ஆஞ்சநேயர் கோயிலுக்கு வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும், விரைவில் வருகை தருவதாக பிரதமர் தெரிவித்ததாக நடிகர் அர்ஜூன் கூறினார்.
நடிகர் அர்ஜூன் கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்டியுள்ளார். அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை அவர் நிர்மாணித்துள்ளார்.