நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டால், புதிய வாக்குப்பதிவு இயந்திரம் கொள்முதல் செய்வதற்காக மட்டும் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்று தோ்தல் ஆணையம் கணக்கிட்டிருக்கிறது.
இந்தியாவில் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனவே, இதற்கான சாத்தியக் கூறுகள் தொடா்பாக ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உட்பட 7 உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இக்குழுவினர் சட்ட ஆணையம், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, குழுவினர் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், தேவைப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சரிபார்ப்பு சீட்டுக் கருவிகள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை குறித்தும், அதற்கான செலவினம் குறித்தும் மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு விளக்கம் கேட்டிருந்தது.
இதற்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய பதில் கடிதத்தின் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், “வாக்குப்பதிவு அலகு, கட்டுப்பாட்டு அலகு மற்றும் வாக்கு சரிபார்ப்பு சீட்டு கருவி ஆகியவை உள்ளடங்கிய ஒரு வாக்குப்பதிவு இயந்திரத் தொகுப்பை 15 ஆண்டுகள் பயன்படுத்த முடியும்.
அதன்படி பார்த்தால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் 3 தேர்தல்களுக்கு ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் 11.80 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
பேரவைகளுக்கும் சேர்த்து தோ்தல் நடத்தினால், ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் 2 வாக்குப் பதிவு இயந்திர தொகுப்புகள் தேவைப்படும். வாக்குப் பதிவு நடைமுறையின் பல்வேறு நிலைகளின்போது இயந்திரங்களில் திடீர் பழுது ஏற்பட்டால், அவற்றை மாற்றுவதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் கூடுதல் இயந்திரங்களை இருப்பு வைக்க வேண்டும்.
அந்த அடிப்படையில், ஒரே நேர தேர்தலுக்கு 46.75 லட்சம் வாக்குப்பதிவு அலகுகள், 33.63 லட்சம் கட்டுப்பாட்டு அலகுகள், 36.62 லட்சம் வாக்கு சரிபார்ப்பு சீட்டு கருவிகள் தேவைப்படும். இதன்படி பார்த்தால், புதிய இயந்திரங்கள் கொள்முதலுக்காக 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10,000 கோடி ரூபாய் தேவைப்படும்.
இது தவிர, கூடுதல் எண்ணிக்கையில் தேர்தல் ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அறை வசதிகள், கூடுதல் வாகனங்கள் அவசியம். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் தயாரிப்பு உட்பட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டால், 2029-ம் ஆண்டில்தான் ஒரே நேர தேர்தலை நடத்த முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த அரசமைப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
அதன்படி, நாடாளுமன்ற அவைகளின் பதவிக்காலம் தொடா்பான 83-வது பிரிவு, குடியரசுத் தலைவரால் மக்களவை கலைக்கப்படுவது தொடா்பான 85-வது பிரிவு, மாநிலப் பேரவைகளின் பதவிக்காலம் தொடர்பான 172-வது பிரிவு, மாநிலப் பேரவைகள் கலைக்கப்படுவது தொடர்பான 174-வது பிரிவு, மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான 356-வது பிரிவு ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
அதேபோல, கட்சித் தாவல் காரணமாக மக்கள் பிரதிநிதிகளைத் தகுதி நீக்கம் செய்வதற்கான அரசமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையிலும் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என்று தோ்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 1951 முதல் 1967-ம் ஆண்டு வரை மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு பெரும்பாலும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுடன் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது.