சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 பெண் நக்சலைட்கள் உட்பட 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை, நாட்டிலேயே அதிக அளவில் நக்சல்கள் நடமாடும் இருக்கும் பகுதியாக விளங்கி வருகிறது. குறிப்பாக, தேர்தல் நடைபெறும்போது, நக்சல்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
பொதுமக்களை வாக்களிக்க விடாமல் வாக்குச்சாவடிகளை குறிவைத்துத் தாக்குவது, தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுவரும்போது தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 அல்லது 3 கட்டமாகத் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் அம்மாநிலத்தில் நடந்த தேர்தல் கூட 2 கட்டமாகவே நடந்தது.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகரமான ராய்ப்பூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பெலம் குட்டா மலைப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டி.ஆர்.ஜி.) மற்றும் சி.ஆர்.பி.எஃப்.பின் உயரடுக்கு பிரிவான கோப்ரா படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த மோதலில் 2 பெண் நக்சல்கள் உட்பட 3 நக்சல்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள், நக்சல் சீருடைகள், மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
உயிரிழந்த நக்சல்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், அருகிலுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.