ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற நிகழ்வை மறக்க இயலாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
3 நாள் பயணமாக 19ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி, நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் கோயில் மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாடிய கம்பராமாயணத்தை அவர் கேட்டார். இதனைத்தொடர்ந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர் 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் பிரதமர் புனித நீராடினார். பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் அவர் தரிசனம் மேற்கொண்டார்.
இந்நிலையில் தமிழக பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலுக்கு நேற்று நான் சென்ற நிகழ்வை எப்போதும் மறக்க இயலாது. கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் காலம் கடந்த பக்தி நிரவியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதேபோல், பிரபு ஸ்ரீராமரின் வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்த அரிச்சல் முனையில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இது ராமர் சேதுவின் தொடக்கப் புள்ளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோதண்டராமசுவாமி கோவிலில் வழிபாடு செய்ததாகவும், அப்போது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.