அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தமிழக தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு, தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாக செய்திகள் வெளியானது.
ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையுமில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை தமிழக தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை என நீதிபதி உத்தரவிட்டார்.
கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.