பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஜனவரி 26-ம் தேதி வரை அடர்த்தியான மூடுபனி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பனி மூட்டம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது.
வட இந்தியாவில் தொடர்ந்து நிலவி வரும் மூடுபனி மற்றும் குளிர் காற்றால், தேசிய தலைநகர் டெல்லியில் இரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய இரயில்வேயின் கூற்றுப்படி, இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி செல்லும் 28 இரயில்கள் தாமதமாக வந்தன.
குறைந்தபட்சம் 4 மணிநேரம் அட்டவணைக்கு பிறகு இயங்கும் இரயில்களில், ஹௌரா – புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் – புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகியவை அடங்கும். மேலும், பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானச் செயல்பாடுகள் தாமதமானதோடு, சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 டிகிரியாக பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட ஒரு டிகிரி குறைவாகும். மேலும், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் இம்மாதம் 26-ம் தேதி வரை அடர்ந்த மூடுபனி இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
தவிர, ஜம்மு பிரிவு, டெல்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் மேலோட்டமான மூடுபனி பாதிப்பை ஏற்படுத்தியதால், பார்வைத்திறன் குறைந்தது என்று கூறியிருக்கிறது.