டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நைஜீரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லாகோஸில் உள்ள நைஜீரிய இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் அஃபர்ஸில் உரையாற்றிய ஜெய்சங்கர்,உலகமயமாக்கல் எவ்வாறு ஆயுதமாக்கப்பட்டது என்பதை விவரித்தார். இன்று நாணயம் ஒரு ஆயுதம், வர்த்தகம் ஒரு ஆயுதம், சுற்றுலா ஒரு ஆயுதம் என குறிப்பிட்டார்.
அவர்கள் உற்பத்தியாளர்களாக நுகர்வோர்களாக ஆதிக்கம் செலுத்தலாம், அவர்கள் மிகவும் சிறிய தயக்கத்துடன் தங்கள் குறிப்பிட்ட தேசிய நோக்கத்திற்காக உலகளாவிய அமைப்பில் தங்கள் சந்தைப் பங்குகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 1945 இல் நிறுவப்பட்ட உலக ஒழுங்கின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் அதிக வாய்ப்புகளை உருவாக்கத் தயங்குகிறார்கள் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதனிடையே இந்தியா வம்சாவளி மக்களை சந்தித்த பின் உரையாற்றிய அவர்,அமெரிக்காவில் 3 ஆண்டுகளில் நடக்கும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, இந்தியாவில் ஒரே மாதத்தில் நடப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
இன்று இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே பணத்தைக் கையில் வைத்து செலவு செய்வதாகவும் அவர் கூறினார். டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமான வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான 6வது கூட்டு ஆணையக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், ஆற்றல், தூதரக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக கூறினார்.
இந்த ஆலோசனையின் போது எரிசக்தி, மின்சாரம், புதுப்பிக்கத்த ஆற்றல், போக்குவரத்து, சுகாதாரம், விவசாயம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.