மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமான உடல் தகுதி இந்தியா இயக்கம் ‘ஃபிட் இந்தியா சாம்பியன்கள்’ போட்காஸ்ட் டிஜிட்டல் தொடரை அறிமுகம் செய்ய உள்ளது.
டிஜிட்டல் மற்றும் மல்டிமீடியா தொழில்நுட்பத்தின் மூலம் ஆரோக்கியத்தை முன்கூட்டியே நிர்வகிக்கும் உடற்பயிற்சித் துறையில் ஒரு முக்கிய பங்குதாரரான கோக்கி உடன் இணைந்து இது தொடங்கப்படுகிறது.
இந்திய விளையாட்டு வீரர்களின் சிறந்த சாதனைகள் மற்றும் எழுச்சியூட்டும் அம்சங்களைக் கொண்ட ஒரு புதுமையான தொடர், ஜனவரி 27-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஹாங்சோவில் நடந்த 2023-ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் காலால் அம்பெய்தி அறிமுகத்திலேயே தங்கம் வென்ற சாதனையுடன் புயலைக் கிளப்பிய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, தொடக்க அத்தியாயத்தில் இடம்பெறுவார்.
“நான் ஒவ்வொரு நாளும் 6-7 மணி நேரம் பயிற்சி செய்கிறேன். வில்லை வளைப்பதன் மூலம் எனது நாளைத் தொடங்குகிறேன். பின்னர், எனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் போட்டிகளில் விளையாடத் தொடங்குகிறேன். எனது உள் மந்திரம் ‘முயற்சி செய்பவர்கள் ஒருபோதும் தோற்க மாட்டார்கள்’ என்பதாகும். இது போட்டிகளை வெல்ல எனக்கு உதவுகிறது” என்று ஜம்மு வில்வித்தை வீராங்கனை வெளிப்படுத்தினார்.
உலக மற்றும் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியனான நீரஜ் சோப்ரா, இந்தத் தொடரின் பட்டியலில் நம்பர் 2 ஆக இருப்பார். தனது தொழில் வாழ்க்கையிலிருந்து அறியப்படாத பக்கங்களையும், ஒரு இளைஞராக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான சோப்ரா, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் நன்மை பற்றி பேசுகிறார்.
உடல் தகுதியின் அவசியத்தை வலியுறுத்தும் சோப்ரா, “தினமும் அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என பிரதமர் கூறியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார். உங்கள் உடலின் தேவைகளைப் பொறுத்து உடற்பயிற்சியை சரியான சமநிலையுடன் செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார். சோப்ராவின் அத்தியாயம் பிப்ரவரி 1௦ ஆம் தேதி ஒளிபரப்பப்படும்.
நுண்ணறிவுள்ள உரையாடல்கள் நிறைந்த 10 பகுதிகளைக் கொண்ட இந்தத் தொடரை இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணைத் தலைமை இயக்குநர் திருமதி ஏக்தா விஷ்னோய் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் ஃபிட் இந்தியாவின் திட்ட இயக்குநராகவும் உள்ளார். யூடியூப் உட்பட பல டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் இந்த அத்தியாயங்கள் கிடைக்கும்.
ஒவ்வொரு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வெளியிடப்படும் இந்த அத்தியாயங்களில், அர்ஜுன் வாஜ்பாய் போன்ற பல்வேறு விளையாட்டு வீரர்களின் உரையாடல்கள் இடம்பெறும்.