நேதாஜியின் கனவை நனவாக்க வேண்டுமென்றால், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பராக்கிரம் திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் பராக்கிரம் திவாஸ் (பராக்கிரம தினம்) கொண்டாட்டம் நடைபெற்றது.
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டின் இளைஞர்களுக்கு நேதாஜி ஒரு முன்மாதிரி. இன்று, நாட்டின் இளைஞர்கள் தங்கள் கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் இந்தியத் தன்மையில் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதம் முன்னெப்போதும் இல்லாதது.
நம் நாட்டை வளர்ச்சியடைய செய்ய அரசியல் ஜனநாயகமும், ஜனநாயக சமுதாயமும் வலுவாக இருக்க வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எண்ணினார். ஆனால், சுதந்திரமடைந்த பிறகு அவரது எண்ணம் நிறைவேறவில்லை. இதை நேதாஜி நன்கு உணர்ந்திருந்ததால்தான், நாடு சந்திக்க உள்ள சவால்களை எடுத்துரைத்து எச்சரிக்கையும் விடுத்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாடு வளர்ச்சியடையாததற்கு வாரிசு அரசியலும் ஊழலும்தான் முக்கியக் காரணம். இவற்றிற்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள்தான் முடிவுகட்ட வேண்டும். இவற்றை எதிர்த்து நாம் தைரியத்துடன் போராட வேண்டும். தேசத்தை பொருளாதார ரீதியாக வளமானதாகவும், கலாச்சார ரீதியாக வலுவாகவும், மூலோபாயத் திறன் கொண்டதாகவும் மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு.
இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகளுக்காக நீண்ட காலமாக வெளிநாடுகளைச் சார்ந்திருந்தது. ஆனால், தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. இந்தியாவின் ஆயுதப் படைகளை ஆத்ம நிர்பர் ஆக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது” என்றார்.
நிகழ்ச்சியில், ஐ.என்.ஏ. வீரர் லெப்டினன்ட் ஆர்.மாதவனை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், இம்மாதம் 31-ம் தேதி வரை நடைபெறும் பாரத் பர்வ் நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பாரத் பர்வ் குடிமக்களை மையப்படுத்திய முன்முயற்சிகள், உள்ளூர், பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு குரல் கொடுக்கும்.