இராமர் கோவில் விவகாரத்தில், கலவரத்தை உருவாக்கி, குளிர் காய தி.மு.க. பார்த்து கொண்டிருப்பதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க, ஈரோடு சந்திப்பு முதல் செங்கோட்டை வரை பயண தூரம் நீட்டிப்பு செய்யப்பட்ட, ஈரோடு திருநெல்வேலி இரயிலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு – திருநெல்வேலி விரைவு இரயில் சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்பது செங்கோட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அவர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உடனடியாக உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி வரை சென்று கொண்டிருந்த இரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரயில் நேரடியாக செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்வதால், வியாபாரிகள் வருவதற்கும், வியாபார பொருட்களை ஏற்றி செல்வதற்கும், பயணிகள் செல்வதற்கும் வசதியாக இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் இரயில்வே அபரிவிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. அதிவேகமான, பாதுகாப்பான, சுத்தமான இரயிலாக வந்தே பாரத் இரயில் உள்ளது.
இந்த வந்தே பாரத் இரயில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும், சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு ஒரு இரயில், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு இரயில், சென்னையில் இருந்து கோவைக்கு ஒரு இரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், கோவையில் இருந்து பெங்களூருக்கு ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இரண்டு வந்தே பாரத் இரயில்கள் நின்று செல்கிறது.
வந்தே பாரத் இரயில் நமது உள்நாட்டு தயாரிப்பு ஆகும். குறிப்பாக, நமது சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் இரயில்கள், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்திய இரயில்வேயில் மிகப்பெரிய மைல்கல் புல்லட் இரயில். மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் இரயில் சேவைக்கான, பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.
அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ், 75 இரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் சென்னை எழும்பூர், சேலம், காட்பாடி, மதுரை, இராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் 6,000 கோடி ரூபாய் அளவிற்கு இரயில்வேக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 9 புதிய இரயில் தடங்கள் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை, இரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட தொகை, வெறும் 800 கோடி ரூபாய் மட்டுமே. ஆனா, இந்த ஒரு நிதியாண்டில் மட்டும், நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 6,000 கோடி ரூபாய் அளவிற்கு இரயில்வே திட்டத்திற்கு மட்டுமே ஒதுக்கி உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில், அனைத்து திட்டங்களையும் சேர்த்து, சுமார் 11 இலட்சம் கோடி அளவிற்கு, பாரத பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு ஒதுக்கி உள்ளார்.
இண்டி கூட்டணி உருப்படாத கூட்டணி. தேர்தலுக்கு முன் எந்த நேரத்திலும் உடையும்.
இராமர் கோவிலை மக்கள் விரும்பி கொண்டாடி கொண்டு இருக்கின்றனர். இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர் காய முடியுமா என தி.மு.க. பார்த்து கொண்டிருக்கிறது.