ஈரோடு பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க, ஈரோடு சந்திப்பு முதல் செங்கோட்டை வரை பயண தூரம் நீட்டிப்பு செய்யப்பட்ட, ஈரோடு திருநெல்வேலி இரயிலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி வரும் விரைவு இரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்குமாறு ஈரோடு பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா். அந்த வகையில், இரயில்வே வாரியம் ஜனவரி 24-ஆம் தேதி முதல் ஈரோடு – திருநெல்வேலி விரைவு இரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்தது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் விரைவு இரயில், செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா, ஈரோடு இரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சரஸ்வதி மற்றும் இரயில்வேத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களின் முன்னிலையில், விரைவு இரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த இரயில் ஈரோடு – செங்கோட்டை இடையே (வண்டி எண் – 16845), தினந்தோறும் ஈரோட்டில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.10 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும்.
மறுமார்க்கமாக செங்கோட்டை – ஈரோடு விரைவு இரயில் (வண்டி எண் – 16846), செங்கோட்டையிலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு, மாலை 03.00 மணிக்கு ஈரோட்டைச் சென்றடையும்.
இந்த இரயில்கள் நெல்லை – செங்கோட்டை பிரிவில், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும்.