ஆம்னி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என தமிழக அறிவித்துள்ள நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாக செல்ல மின்சார ரயில் வசதி இல்லை என்றும், அதேபோல் அதிக எண்ணிக்கையில் மாநகர பேருந்துகள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகள் அதே பேருந்து நிலையத்தில் உள்ள மாநகர பேருந்துக்கு செல்ல நீண்ட தூரம் நடக்க வேண்டி இருப்பதாகவும் பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில், கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என்றும், இதனை மீறும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், எனவே கோயம்பேட்டில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்தனர்.
கோயம்பேட்டில் இருந்து இன்று ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரடியாக சென்று வலியுறுத்தினர். அப்போது, அவர்களுக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுபற்றி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறுகையில், “தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறை தினங்களுக்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. நேற்று இரவு திடீரென அறிவிப்பு வெளியிட்டு, 30-ம் தேதிக்குள் கோயம்பேட்டை காலி செய்யும்படி கூறினார்கள்.
தற்போது திடீரென கோயம்பேட்டில் இருந்து இயக்கக்கூடாது என்று சொன்னால் என்ன செய்வது? 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் எப்படி திடீரென இடத்தை மாற்ற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.