பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து நாளை தொடங்குகிறார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் 3 அடுக்குகளாக மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, கோவில் கும்பாபிஷேக விழா, இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை கடந்த ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தையும் உத்தர பிரதேசத்தில் இருந்தே தொடங்க பா.ஜ.க.வினர் முடிவு செய்திருக்கிறார்கள். அதாவது, மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. ஆனால், பா.ஜ.க. இன்னும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவில்லை.
எனவே, இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்த கையோடு, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்திருக்கின்றனர். அந்த வகையில், உ.பி. மாநிலம் புலந்த்சாஹரில் நாளை பேரணி நடத்த பா.ஜ.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தப் பேரணியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தனது மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு உ.பி. மாநிலத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு பிராந்தியத்தில் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜ.க. 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆகவே, இத்தேர்தலில் அதைவிடக் கூடுதல் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்தப் பிரச்சாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க. தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.